அரி சங்கரின் கரப்பான்
Moralistic plays எனப்படும் அற நாடகங்கள் மேலை இலக்கியத்தில் ஒருவகைமையாக எப்போதும் இருந்து வந்திருக்கின்றது. அந்த நாடகங்களின் தொடர்ச்சியாக நவீன இலக்கியத்தில் நாம் டால்ஸ்டாய் போன்றவர்களைக் கருதலாம்.அதற்கு எதிரான போராட்டமாக தாஸ்தோவ்ஸ்கியையும் சொல்லலாம்
ஆனால் அற நாடகங்கள் சமகால இலக்கியத்தில் இடம் பெறக்கூடியவையா? என்பது ஒரு கேள்வி.
குறிப்பாக வலியது பிழைக்கும் என்கிற கருத்து மேலோங்கி நிற்கிற, முதலாளித்துவம் மட்டுமே ஒற்றைத் தத்துவமாக மிஞ்சி நிற்கிற இவ்வுலகில் தனிமனித அற நாடகங்களுக்கு என்ன மதிப்பிருக்க முடியும்? அவை மதிப்பு மிக்கவை என்று கருதினால் கூட அதை எப்படி இலக்கியமாக்குவது என்பதெல்லாம் சற்று துன்பம் தரக்கூடிய கேள்விகளாகத்தான் இருக்கும். ஆனால் அரிசங்கரின் கரப்பான் நாவல் இந்த தடைகளை சரியாக தாண்டியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இவான் இலோயிச்சின் மரணம் எழுதிய டால்ஸ்டாய் மட்டுமல்லாமல் ஒரு கிறிஸ்துமஸ் கீர்த்தனை குறுநாவலை எழுதிய சார்லஸ் டிக்கன்சையும் நினைவுபடுத்துகின்ற இந்த நாவல் ஒரே அமர்வில் வாசிக்க கூடிய அளவுக்கு வேகமாகவும் அதே சமயம் நிதானமாக யோசிக்க வைக்க கூடிய அளவுக்கு ஆழமானதாகவும் இருக்கிறது. ஆழம் அது எழுப்புகிற கேள்விகளால் மட்டுமல்லாமல் அது சொல்லப்படும் விதத்தாலும் இருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய எழுத்தாளருக்கு இருக்கக்கூடிய முக்கியமான சவால்.
சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் அரவிந்தனின் கடைசி சிறுகதை தொகுப்பான 'மில்லெனியம் சிறுகதைகளுக்கு' முன்னுரை எழுதுவதற்காக அவற்றை நான் படித்த போது இது போன்ற சமகால அறச்சிக்கல்களை அது பாதியிலேயே கைவிட்டு விடுகிறது என்பதைப் பார்த்தேன். அது அவற்றை எடுத்துக்காட்டுவதோடு நின்று விடுகிறது அல்லது அவ நம்பிக்கை தென்பட முடிந்து விடுகிறது.
கரப்பான் நாவல் அவ்வாறு முடிந்து விடுவதில்லை அது அரவிந்தன் கூச்ச சுபாவம் காரணமாகவோ அல்லது ஒரு கடவுளின் இடத்தை எடுத்துக் கொள்ள தயங்கியோ நின்று விட்ட இடங்களில் இருந்து மேலெழுந்து செல்கிறது
இதில் வருகின்ற பிரதான பாத்திரத்தின் அல்லது பாத்திரங்களின் நடத்தைகளுக்கான காரணங்கள் அப்படியே விட்டுவிடப்படுவதில்லை ஒரு நாவலில் அது ஓரளவுக்காவது விளக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.சிறுகதை என்பது பெரும்பாலும் தருணங்கள் என்பதால் அது தன்னை முழுமையாக விளக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்கிற நிர்பந்தம் இல்லை.
அறநாடகம் என்று நான் சொல்லும்போது அரிசங்கர் ஒரு மிகப் பழமையான கதை சொல்லி அல்லது மரபான கதை சொல்லி என்கிற பிம்பம் ஏற்பட்டு விடுகிறது என்பதை நான் அறிவேன். அரிசங்கர் அதை தவிர்க்க மிகவும் முயன்றிருப்பது இந்த கதையில் அவர் பயன்படுத்தியிருக்கும் பின் நவீனத்துவ பல குரல் உத்திகளிலிருந்து தெரிகிறது. பொதுவாக தமிழில் இந்த உத்திகள் வெளிப்பட்டிருப்பது போல
அது மிகப்பெரிய உறுத்தலாக அல்லது தனது சாமர்த்தியத்தைக் காட்டும் உபாயமாக மட்டும் இல்லாமல் கதையோடு கடைசியில் மிகச்சரியாக பிணைந்து கதையையும் மேலேற்றி விடுவது விடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
மிகச் சரளமாக அதேசமயம் தன்னை ஒரு அறிவுஜீவியாகக் காட்டிக் கொள்ள முயலாத அதே சமயம் தன்னை ஒரு அப்பாவியாகவும் காட்டிக் கொள்ளவும் முயலாத உரையாடல்கள் அரிசங்கர் காட்சி ஊடகங்களிலும் நன்றாக பங்களிக்க கூடியவர் என்கிற பிம்பத்தை நமக்கு தருகிறது
நாவலை அவர் நகர்த்திச் சென்றிருக்கும் விதம் அதில் இருக்கும் ஒரு லேசான மர்மம் இந்த பிம்பத்தை நமக்கு மேலும் அதிகரிக்கிறது
இந்த நாவலில் தென்படுகிற கை பெருநாவல்களுக்கு மிக எளிதாக தாவிச்செல்லக்கூடியது என்று இந்த நாவலை படித்து முடிக்கும் போது எனக்குத் தோன்றுகிறது அந்த நாவல்களை அவர் இன்னும் கொஞ்சம் நிதானமாக முடிக்கலாம். முடிவை நோக்கிச் செல்கையில் தென்படும் சிறிய அவசரம் மட்டுமே இந்த நாவலின் குறையாக நாம் சொல்ல முடியும்.
சமகாலத்தில் வந்திருக்கிற சமகால கார்ப்பரேட் சமூகம் பற்றிய சமகால எழுத்தாளர்களின் நாவல்களில் முக்கியமான ஒன்று.

Comments
Post a Comment